
சிறுவயது முதலே சம்பத்குமாருக்கு ஜோதிடம் மீது இனம்புரியாதவொரு ஆர்வம் உள்ளீடாக இழையோடிக்கொண்டே இருந்தது. அதன் காரணம் அவரின் தந்தையின் தந்தையான பாட்டனார், C.N.வீரிசெட்டியார் குறித்த செய்திகளை தன் தந்தையின் வாயிலாக செவிவழி உணவாக கேட்டுக்கொண்டே இருந்ததும் ஒரு முக்கிய காரணம். ராமாயணம் C.N.வீரிசெட்டியார் என்கிற நாமம் கொண்ட சம்பத்குமாரின் பாட்டனார், ஒரு சிறந்த ஆராய்ச்சித்திறன் மிகுந்த வெகு துல்லியமாகக் கணிக்கக்கூடிய ஜோதிடர். அவரின் கணிப்புத்திறன் குறித்த செய்திகள் சம்பத்குமாருக்கு அவரின் தந்தை வாயிலாகவும் பாட்டனாரின் சிஷ்யர் சேலம் கொண்டலாம்பட்டி ஜோதிடர் சிக்கண்ண செட்டியார் வாயிலாகவும் இயல்பாக ஊட்டப்பட்டுக்கொண்டே இருந்தது. இதில் ராமாயணம் C.N.வீரிசெட்டியார் அவர்களுக்கு ஜோதிடம் கற்றுத்தந்த குருவைப்பற்றிய செய்தியும் இழையீடான செய்தியாக பின்னிப்பிணைந்தவொன்று.
ராமாயணம் C.N.வீரிசெட்டியாரின் ஜோதிஷ குரு, அவரின் தந்தை சிகரம்பட்டி C.நஞ்சைய்ய செட்டியார். இவர் ஜோதிடத்தில் மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் வித்தகராக இருந்தார். இவரின் குடும்பத்தொழில் நெசவு. சேலைகள் தயாரிப்பு. தன் குடும்பத்தாருடன் சேலை தயாரிப்பில் ஈடுப்பட்டிருந்த சிகரம்பட்டி C.நஞ்சைய்ய செட்டியார், ஜோதிடத்தையும் வைத்தியத்தையும் சேவையாக செய்து வந்தார். இவரின் வைத்திய நிபுணத்துவம் அலாதியானவொன்று. அவரின் காலங்களில் (1850 - 1930) அவர் மேற்கொண்ட வைத்திய நிபுணத்துவம் இன்றைக்கும் அதிசய அதிர்வுகளை உள்ளுக்குள் ஊன்ற வைப்பவை.
அதிலொன்று, வயது முதிர்ந்து மரணப்படுக்கையில் நினைவிழுந்து, இனி எழவே மாட்டார் என்று இருப்போரை இவர் சென்று நாடி பிடித்துப்பார்த்து ஐந்து, நான்கு, மூன்று என முனைகள் கொண்ட அவராகவே தயாரித்த மருத்துவப் பாஷாண மூலிகைக்கற்களை குறிப்பிட்ட விகிதத்தில் தேய்த்து எடுத்து அவர்களின் நாக்கில் வைத்து தோய்த்து, இன்னும் சிறிது நேரத்தில் இவருக்கு நினைவு திரும்பும், அந்நினைவு இன்னும் இவ்வளவு நேரத்திற்கு தெளிவாக இயல்பாக இருக்கும். அப்போது இவரிடம் யார் என்ன விபரங்களை கேட்க வேண்டுமோ அதைக் கேட்டுக்கொள்ளுங்கள் எனக்கூறிவிடுவார். அவர் சொன்ன நேரத்தில் அவருக்கு நினைவு திரும்பி அவர் எவ்வளவு நாழிகை நேரம் சொன்னாரோ அதே அளவிலான காலத்திற்கு தெளிவாகப் பேசவும் செய்து பின்னர் அதே பழைய நினைவிழந்த நிலைக்குச் சென்று விடுவார். சென்று கொண்டிருக்கும் உயிரைப் பிடித்து இழுத்து சற்று நேரத்திற்கு சஞ்சீவித்தனம் கொடுக்கும் செயல் இது. இதுவரையில் நவீன மருத்துவத்திற்கு வசப்படாத செயலும் கூட!
இப்படியான மருத்துவக்கலையையும் ஜோதிஷ அறிவையும் கொண்டிருந்த சிகரம்பட்டி C.நஞ்சைய்ய செட்டியார் இக்கலைகளை தன் மக்களான நால்வருக்கு ஒருவருக்கேனும் கற்றுத்தர முயன்றபோது அதற்கு வசப்பட்டவர் அவரின் முதல் மகன் C.N.வீரிசெட்டியார் மட்டுமே! வீரிசெட்டியாருக்கும் மருத்துவத்தை விட ஜோதிஷமே அதிகம் ஈர்த்தது. அதனால் ஜோதிடத்தில் தேர்ந்தவர் ஆனார்.
இவற்றையெல்லாம் செவிவழி உணவாக ஈர்த்துக்கொண்ட சம்பத்குமாருக்கு அவ்வுணவின் செரிமான மிகுதியின் அடர்த்தி, உணர்வலையாக தொடர்ந்து அதிர்ந்தெழுந்து அவரின் மரபு வழி படிமங்களை அடித்து உடைத்து அவரின் மேல்தளத்திற்கு கிளம்ப வைத்தது எனலாம். அதன் விளைவாக தன் 18 வது வயதிலிருந்து ஜோதிடத்தின் மீதான தன் ஆர்வத்தை தேடலை தீவிரப்படுத்தினார்.
இவரின் ஆரம்பகால ஜோதிடத்தேடல் புராதன ஜோதிடப்புத்தகங்களை தேடி வாசிப்பதில் ஆரம்பித்து அடிப்படை ஜோதிடத்தை சுயமாகக் கற்றுக்கொள்வதில் கிளை பிரிந்து, தென்னிந்தியாவின் அனைத்து புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவரையும் சந்திந்து அவர்களின் வழிமுறைகளை கேட்டறிவது என விரிந்தது.
இவர் சந்தித்த அனைத்து ஜோதிடர்களிடமும் ஒரு கேள்வி கேட்டார். அது, என்னுடைய ஜாதகத்தின் மூலம், என்னுடைய அடிப்படை தகுதி, திறன் (capacity) என்ன? அப்படி இதுதான் அடிப்படை தகுதி என்றால், அந்த தகுதியை மிகுதியான தகுதியாக அதிகப்படுத்த முடியுமா? மிகுதிப்படுத்திய தகுதியை அடிப்படைத் தகுதியாக நிலைப்படுத்தவும் முடியுமா? இந்தக்கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியவில்லை.
இந்நிலையில் தானே அதற்குண்டான வழிமுறையக் கண்டுபிடிக்கலாமென அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினார் சம்பத்குமார். அதற்கு அவர் தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அந்த ஆராய்ச்சிக்காக ஜோதிடம் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து கிளை வழிமுறைகளையும் ஆராய்ந்தார். மனிதனின் எண்ணத்திற்கேற்ப மாற்றம் கொள்ளும் கைரேகை மற்றும் கிரகமேடுகள், புராதன ஜோதிடத்தில் இருந்து நவீனமாக உயிர்க்கொண்ட எண்ணியல் எனும் நியூமராலஜி, ஒவ்வொரு கிரங்களின் சுபாவங்கள், காரகத்துவங்கள், அதன் வீரியமான அலைவரிசைகள் மூலம் மனிதனின் மனதிலும் உடலிலும் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்கள் என அனைத்தையும் தன்னை வைத்தே ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகள் நீடித்தது.
அந்த ஆராய்ச்சி பூரணம் ஆனபோது அது சம்பத்குமார் அவர்களால் “நியூமராஸ்ட்ராலஜி” என்று பெயரிடப்பட்டது. ஜோதிடக்கலை என்பதே ஒருவரின் வாழ்வை வரைபடமாக தெரியப்படுத்துவதுதான். அவ்வரைபடத்தில் நுண்ணியமாக எழுதியிருக்கும் மொழியை படித்து உரைப்பவரே ஜோதிடர். அம்மொழியின் வித்து ஒருவரின் கர்மா! ஒருவரின் பூர்வகர்மா விளைவுகளின் செயல் விளக்கமே ஒருவரின் ஜாதகமாக வரையப்படுகிறது. ஒவ்வொருவரின் பூர்வஜென்மப் புதையலின் வரைபடம்தான் ஜாதகம். அதில் பூர்வ புண்ணிய பாவ பலன்களும் கொட்டிக்கிடக்கும். அதன் அடிப்படியில்தான் ஒருவரின் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது.
தன் ஆராய்ச்சி பூரணமடைந்ததைத் தொடர்ந்து, இவரின் பாணியின் அடிப்படையில் மக்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரின் முக்கிய பணி ஜாதகம் மூலம் ஒருவரின் தகுதியை அறிவிப்பது! எந்த ஜோதிடர்களிடம் இவரின் கேள்வியான என் தகுதி, திறன் (capacity) என்ன என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லையோ அந்த பதிலை தன்னை நாடி வரும் எல்லோருக்கும் கொடுத்து வருகிறார். தகுதியை இவர் முக்கியமாகக் கருதுவதின் காரணம், தொழில் அடிப்படையிலும் சரி, வாழ்வின் அடிப்படையிலும் சரி, தன் தகுதி என்ன என்பதை அறியாமல் அகலக்கால் வைத்து வாழ்வில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்வோர் அநேகம் பேர். அதே போல் தன் தகுதியின் மிகுதியை அறியாமல் முன்னேற்றப்பாதையில் காலெடுத்து வைக்கத் தயங்குபவர்களும் அநேகம் பேர்! இவர்களெல்லாம் அவரவர்களின் தகுதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தெரிந்துகொண்டால் அவர்களை அவர்களே வழிநடத்திக் கொள்வர். அவர்களை வழிநடத்த மற்றவர்கள் துணை தேவையிராது.
சம்பத்குமாரின் ஜோதிட சேவையின் நோக்கமே ஒருவருக்கு அவரின் தகுதி என்னவென்பதை அறிவித்து அதில் தகுதிக்குறை இருப்பின் அதை நிறை தகுதியாக மாற்ற இறை உத்தரவு இருப்பின் அதனையும் வழங்கி ஒருவரை செல்வமும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வியலாளராக மாற்றம் கொள்ள வைப்பது மட்டுமே!
மரபு வழித்தோன்றலின் அடிப்படையினாலும் இறையருள் குருவருள் மற்றும் தன் சுயமுயற்சியினாலும் ஜோதிட அறிவைப் பெற்றிருக்கும் இவர், டெக்ஸ்டைல் டிசைனிங் படித்து 1989 ன் இறுதியில் பட்டுச்சேலை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டிசைன்களை (Handmade Graph Designs) வடிவமைத்து தரும் தொழிலை தொடங்கியவர். அதற்கு முன்னரே இவரின் தந்தை சேலம் N.V.அண்ணாமலை செட்டியார் ஜக்கார்டு டிசைனிங் (Jacquard Punch Designs) தொழிலை செய்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பத்குமார் தன் விடாமுயற்சி கொண்ட உழைப்பாலும் ஆர்வத்தாலும் இறையருளாலும் TEXTILE DESIGNING தொழிலின் உச்சத்தை தொட்டவர். இவரின் புதிய முயற்சிகளாலும் அதன் பலன்களாலும் டெக்ஸ்டைல் டிசைனிங் தொழிலை சேலம் மாவட்டத்தில் பிரபலமடையச் செய்தார். பின்னர் அது தமிழகமெங்கும் விரிவடைந்தது. அதன் பலனாக ஆயிரக்கணக்கான இளம் தொழில் முனைவர்கள் அந்த தொழிலில் இறங்கினர். அதன் மூலம் பெரும் பலன்களையும் அடைந்தனர். அடைந்து வருகின்றனர்.
தன் டிசைனிங் தொழிலைத் துவங்கி பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்பு 2007 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட டெக்ஸ்டைல் டிசைனர்களுக்கான அசோசியேஷன் துவக்கப்பட்டு அதன் தலைவராக சம்பத்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 லிருந்து 2015 வரை ஒன்பது ஆண்டுகள் SALEM DISTRICT TEXTILES DESIGNERS AND HANDLOOM JACQUARD PUNCHERS WELFARE ASSOCIATION தலைவராக சேவையாற்றினார். அதன் பின்னர் 2016 ல் முதல் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட TAMILNADU SILK SAREE TEXTILE DESIGNERS DEVELOPMENT ASSOCIATION னின் தமிழகத் தலைவராகவும் பொறுப்பேற்றார். தற்போது ARUNA TEXTILE DESIGNS எனும் நிறுவனத்தின் நிறுவனராகவும் தலைமை வடிவமைப்பு வல்லுனராக இருந்து வருகிறார்.
You cannot copy content of this page